குட்டிச் செல்லங்களே! 

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! 

இம்மாதம் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படும், பறவையின் பெயர் மைனா. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் இது எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பறவை. மைனா என்பது ஹிந்தி சொல். தமிழ் இலக்கியங்களில் ‘நாகணவாய்ப்புள்,’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உடல் அடர்ந்த காப்பிக்கொட்டை நிறம், தலையும் கழுத்தும் கறுப்பு, வாளுக்கடியில் வெள்ளை, கண்ணைச் சுற்றி மஞ்சளாக இருக்கும். புறா, காக்கா, சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில் வாழும்.

மரப்பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும், கட்டிட ஓட்டைகளிலும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.  வைக்கோல், தாள், துணி ஆகியவற்றைக் கொண்டு கூடு கட்டும்.

பூச்சி, புழு, பழம், தேன் என எல்லாமும் தின்பதால் இது ஓர் அனைத்துண்ணி. 

சிலர் இதை வீட்டில் வளர்ப்பதுண்டு.  கிளி போல, நாம் சொல்வதைத் திரும்பச் சொல்லும் இயல்புடையவை.

குழந்தைகளே! அக்கம் பக்கத்தில் இப்பறவையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றால் எங்களுக்கு அது பற்றி எழுதுங்கள்.

நீங்கள் எழுத வேண்டிய முகவரி:-

feedback@poonchittu.xyz

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments